காவேரி மருத்துவமனை முன்பாக தொண்டர்கள் அதிகளவில் குவிந்து வருவதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு..!

429

ரத்த அழுத்த குறைவு காரணமாக தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனை முன்பாக தொண்டர்கள் அதிகளவில் குவிந்து வருவதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்துவந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நேற்றிரவு திடீரென ரத்த அழுத்த குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவர்கள் அங்கு விரைந்து சென்று அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். தகவலறிந்த மு.க.ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோரும் கோபாலபுரம் இல்லத்திற்கு விரைந்து சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, மருத்துவர்களின் ஆலோசனைபடி உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதியை காண காவேரி மருத்துவமனை முன்பாக தி.மு.க. தொண்டர்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். இதனால், மருத்துவமனை வளாகத்தில் திரளான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.