14-வது நாளாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அத்திவரதர்..!

120

40 ஆண்டுகளுக்குப்பின், காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலில் 14-வது நாளாக இன்று நீல வண்ண பட்டாடை அலங்காரத்துடன் அருள்பாலித்து வரும் அத்திவரதரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் கடந்த 1ஆம் தேதி தொடங்கி, இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ள நிலையில், இன்றும் நீல வண்ண பட்டாடை உடுத்தி அருள்பாலிக்கும் அத்திவரதரை ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்து வருகின்றனர்.

இதனிடையே, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை நடவடிக்கையால், சீரான தடுப்புகள் அமைக்கப்பட்டு, பக்தர்கள் கூட்ட நெரிசல் இன்றி, விரைவாக அத்திவரதரை தரிசித்தவண்ணம் உள்ளனர். இதனிடையே, காஞ்சிபுரம் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன் உள்ளிட்டவர்கள் இன்று தரிசனம் செய்தனர். அத்திவரதரை தரிசிக்க, தொடர்ந்து மக்கள் கூட்டம் அலைகடல் போல வருகை தந்து கொண்டிருக்கும் நிலையில், காஞ்சிபுரம் நகரில் போலீஸார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, அத்திவரதரை இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படும் என ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.