இறுதிக்கட்டத்தை எட்டும் இமாச்சல் பிரதேச தேர்தல் பிரச்சாரம்,காங்கிரஸ்-பா.ஜ.க பலப்பரீட்சை!

402

இமாச்சல் பிரதேச தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைவதையொட்டி பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் இறுதிக் கட்ட சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர்.
இமாச்சல் பிரதேசத்தில் வீரபத்ர சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசின் பதவி காலம் நிறைவடைய உள்ளதால் பொதுத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் சார்பில் தற்போதைய முதல்வர் வீரபத்ர சிங்கும், பா.ஜ.க சார்பில் முன்னாள் முதல்வர் பிரேம்குமார் தமாலும் முதல்வர் வேட்பாளர்களாக மீண்டும் களம்கண்டுள்ளனர். காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வீரபத்ர சிங்கை ஆதரித்து இமாச்சல் பிரதேசத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதேபோல் பிரேம்குமார் தமாலுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளை மறுநாள் வாக்கு பதிவு நடைபெற இருப்பதால் இரு பிரதான கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் இறுதிக் கட்ட சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.