உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள்–குடும்பத்தினருக்கு வெள்ளித்தட்டில் விருந்து!

287

போபால், ஜூன், 20–

உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கும் அவர்களின் மனைவிக்கும் வெள்ளித் தட்டில் விருந்து வைத்ததுடன், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருள்களையும் மத்தியப் பிரதேச அரசு கடந்த ஏப்ரல் மாதம் வழங்கி கவுரவித்துள்ளது.

இந்தத் தகவல், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு விருந்தளிக்கும் நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், மற்ற நீதிபதிகள், 240க்கும் மேற்பட்ட அதிமுக்கியப் பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியை நடத்த எவ்வளவு செலவானது? என்று தெரிவிக்குமாறு தகவல் பெறும் சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் அஜய் தூபே என்பவர் விண்ணப்பித்திருந்தார். மத்தியப் பிரதேச அரசு சார்பில் அவருக்கு அளிக்கப்பட்ட பதில் விவரம் பின் வருமாறு:–

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து முக்கியப் பிரமுகர்களுக்கும் வெள்ளித் தட்டில் உணவு பரிமாறப்பட்டது. இதற்காக மத்தியப் பிரதேச அரசு ரூ.6.94 லட்சம் வழங்கியது. வெள்ளித் தட்டுகள் வாங்க ரூ.3.57 லட்சம் செலவானது. உணவுகள் தயாரிக்கவும், விருந்தினர்களுக்கு பரிசுகள் வாங்கவும் ரூ.3.37 லட்சம் செலவானது.

இந்நிகழ்ச்சியை பாரம்பரிய முறைப்படி நடத்த மத்தியப் பிரதேச சுற்றுலா வாரியம் ஏற்பாடுகளை மேற்கொண்டது என்று பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.