அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா… சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு

229

சென்னையில் துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற 68-வது குடியரசு தினவிழாவில், அதன் தலைவர் ரவீந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதனையடுத்து, சமாதான புறாக்கள் மற்றும் மூவர்ண பலூன்களை பறக்க விட்டார். இதையடுத்து, சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ்களை ரவீந்திரன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை துறைமுக பொறுப்புத் துணைத் தலைவர் ஜார்ஜ், ஹரிசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல, சென்னை ரிசர்வ் வங்கியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், மண்டல தலைமை மேலாளர் அருந்ததி லெச் கலந்து கொண்டு மூவர்ண தேசிய கொடியை ஏற்று வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், ஆயுதப்படையில் சிறப்பாக பணியாற்றிய இரண்டு வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து தமிழக காவல்துறையின் அணிவகுப்பை ஆட்சியர் மகேஸ்வரி ஏற்றுக் கொண்டார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போற்றி பரிசுகள் வழங்கினார். பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 66 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் அதன் முதன்மை ஆணையர் சி.கே.தாஸ் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதுபோன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில் தலைமை நீதிபதி எஸ்கே கவுல் தேசிய கொடி ஏற்றினார். இந்த விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.