சூடு பிடிக்கும் குட்கா ஊழல் விசாரணை : சிபிஐ காவல் முடிவடைந்ததால், நீதிமன்றத்தில் 5 பேரும் ஆஜர்

311

குட்கா ஊழல் வழக்கில், மாதவராவ், சீனிவாசராவ் ஆகியோரின் சிபிஐ காவல் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், காவல் ஆய்வாளர் சம்பத்குமாரிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தை உலுக்கிய குட்கா முறைகேடு விவகாரத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா, டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் வீடுகள் உட்பட 40 இடங்களில் சோதனை செய்தனர். இதனையடுத்து, குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், 5 பேரையும் சிபிஐ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். சிபிஐ காவல் முடிந்து, 5 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, மாதவராவ், சீனிவாச ராவ் ஆகியோரின் காவலை மேலும் 2 நாள் நீட்டிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அனுமதியளித்த சிபிஐ நீதிமன்றம், மற்ற 3 பேரையும் வரும் 20 ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, தூத்துக்குடி சிப்காட் இன்ஸ்பெக்டராக இருக்கும் சம்பத்குமாருக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளநிலையில், அவர் இன்று சென்னை சாஸ்திரிபவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். முன்னதாக, செங்குன்றம் காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிய சம்பத்குமாரிடம் தற்போது சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பத்குமார் அளிக்கும் வாக்குமூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து, காவல் நீட்டிப்பு செய்யப்பட்ட மாதவராவ், சீனிவாசராவ் ஆகியோரிடம் சிபிஐ மீண்டும் விசாரணை நடத்தும் என தெரிய வந்துள்ளது.