குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ் மற்றும் அவரது கூட்டாளி உமாசங்கர் குப்தா உட்பட 6 பேரை சிபிஐ கைது..!

304

குட்கா முறைகேடு விவகாரத்தில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ் மற்றும் அவரது கூட்டாளி உமாசங்கர் குப்தா உட்பட 6 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

குட்கா ஊழல் குறித்த கிடங்கு உரிமையாளர் மாதவ்ராவிடம் நடத்திய விசாரணையில், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சென்னை உட்பட பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை டிஜிபி ஏ.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீடுகள் உட்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. டிஜிபி ராஜேந்திரன், அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோர் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றநிலையில், விடியவிடிய ஜார்ஜ் வீட்டில் நடைபெற்ற சோதனையில், இரண்டு பைகள் நிறைய முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து, சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அள்ளிச்சென்ற சிபிஐ அதிகாரிகள், சென்னை சாஸ்திரிபவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அவற்றை ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில், ராஜேந்திரன், நந்தகுமார் ஆகிய இரண்டு இடைத்தரகர்களை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து, ஆவணங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், அவரது கூட்டாளி உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால் வரித்துறை அதிகாரி என்.கே.பாண்டியன் ஆகியோர் சிபிஐ அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, சோதனையில் சிக்கிய ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.