சரக்கு, சேவை வரி மசோதா நிறைவேறியது: செல்போன், நகை விலை உயர்கிறது! டி.வி., சிமெண்ட், கார் விலை சரிகிறது!!

380

புதுடெல்லி, ஆக. 4–
மாநிலங்களவையில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நேற்று நிறைவேறியது. அடுத்த நிதியாண்டு முதல் இது அமலுக்கு வரும் என்று தெரிகிறது. செல்போன், நகை, கார் போன்றவற்றின் விலை உயர்கிறது. டி.வி., வாஷிங்மிஷின், சிமெண்ட், பிஸ்கட் போன்றவற்றின் விலை சரிகிறது.
சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நெடுங்காலமாக நிலுவையில் இருந்தது. காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போதே இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. இதில் இடம் பெற்றிருந்த சில ஷரத்துகளுக்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. சரக்கு மற்றும் சேவை வரி மசோதா குறித்து அவ்வப்போது ஆலோசிக்கப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டன.
காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி மலர்ந்தது. பா.ஜ.க. ஆட்சியும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை துரிதமாக நிறைவேற்ற வேண்டும் என்பதில் முனைப்பு காட்டியது. பிரதமர் நரேந்திரமோடியும், நிதி மந்திரி அருண் ஜெட்லியும் இம்மசோதாவை வெகு விரைவில் நிறைவேற்றிவிட வேண்டும் என்பதில் அக்கறை காட்டினர்.

மூன்றில் இரு பங்கு
மக்களவையில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா எளிதாக நிறைவேறிவிட்டது. ஏனெனில் மக்களைவில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அமோக ஆதரவு உள்ளது. மாநிலங்களவையில் இக்கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லை.
இது அரசியல் சாசன திருத்த மசோதா ஆகும். எனவே சபையில் ஆஜராகி வாக்களிப்பவர்களில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை ஆதரவு கிட்டினால் மட்டுமே மசோதாவை நிறைவேற்ற முடியும்.
எனவேதான் மற்ற கட்சிகளின் ஆதரவையும் திரட்ட வேண்டிய நிலைக்கு பா.ஜ.க. தள்ளப்பட்டது. பல்வேறு கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்ட யோசனைகளை அரசு ஏற்றுக் கொண்டது. மேற்கு வங்காள நிதிமந்திரி அமித் மித்ரா தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது. முக்கிய பரிந்துரைகள் அனைத்தையும் மத்திய அரசு ஏற்க முன் வந்துள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய மந்திரி சபை, சரக்கு மற்றும் சேவை வரி மசோதா தொடர்பான ஷரத்துகள் குறித்து ஆய்வு நடத்தியது. ஒரு மாநிலத்திலிருந்து அடுத்த மாநிலத்திற்கு பொருளை கொண்டு சென்று விற்கும் போது கூடுதலாக ஒரு சதவீதம் வரி விதித்துக் கொள்ளலாம் என்று சேர்க்கப்பட்டிருந்த ஷரத்தை விலக்கிக் கொள்ள மத்திய அரசு இசைவு தெரிவித்தது.

203 வாக்குகள்
முதல் 3 ஆண்டுகளுக்கு 100 சதவீத இழப்பீடு, 4–ம் ஆண்டுக்கு 75 சதவீத இழப்பீடு, 5–ம் ஆண்டுக்கு 50 சதவீத இழப்பீடு என்று சேர்க்கப்பட்டிருந்த ஷரத்து திருத்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட ஷரத்தின்படி முதல் 5 ஆண்டுகளுக்கும் முழு இழப்பீட்டு தொகையை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும். முட்டுக்கட்டைகள் நீங்கி விட்ட நிலையில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மாநிலங்களவையில் நேற்று பிற்பகல் தாக்கல் செய்யப்பட்டது.

மாநிலங்களவையில் பல மணி நேரம் வாதம் நடைபெற்றது. காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளும் மசோதாவை ஆதரித்தனர். மசோதாவுக்கு ஆதரவாக 203 வாக்குகள் பதிவாகின. யாரும் எதிராக வாக்களிக்கவில்லை. வாக்கெடுப்புக்கு முன்னதாக மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்துவிட்டனர்.
சரக்கு மற்றும் சேவை வரி அரசியல் சாசனம் சார்ந்த விவகாரம் என்பதால் இந்த மசோதாவை 50 சதவீதத்திற்கும் அதிகமான மாநில சட்டமன்றங்களும் நிறைவேற்ற வேண்டும். இதன்பிறகே இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளிப்பார். இதன்பிறகே இது சட்டமாகும்.


ஏப்ரல் முதல் அமல்

மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை 29. எனவே 15 மாநில சட்டசபைகளில் இம்மசோதாவை நிறைவேற்ற வேண்டும். பா.ஜ.க. மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் ஆட்சி 13 மாநிலங்களில் நடைபெறுகிறது. மேலும் 2 மாநில சட்டசபைகளில் மசோதாவை நிறைவேற்றுவது கடினமானது அல்ல என்று கூறப்படுகிறது. அடுத்த நிதியாண்டு, 2017 ஏப்ரலில் தொடங்குகிறது. அடுத்த நிதியாண்டிலிருந்து சரக்கு மற்றும் சேவை வரி அமலாகும் என்று நிதிமந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
சரக்கு மற்றும் சேவை வரி எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு என்பது இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. மாநில நிதி மந்திரிகளுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது.

எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படும் என்பது தொடர்பான உத்தேச அளவுகள் கசிந்துள்ளன. டி.வி., வாஷிங் மிஷின் போன்றவற்றுக்கு 17 முதல் 18 சதவீதம் வரை வரி விதிக்கப்படும். கட்டுமான சாதனங்களுக்கும், அறைகலன்களுக்கும் இதே அளவு வரி விதிக்கப்படும். இப்போது பல்வேறு மாநிலங்களிலும் இவற்றுக்கு 24 முதல் 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. எனவே, அடுத்த நிதியாண்டு முதல் இவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது.
கார்களுக்கு 27 முதல் 30 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. இனி 18 முதல் 20 சதவீதம் வரை மட்டுமே வரி விதிக்கப்படும். எனவே இவற்றின் விலை கணிசமாக குறையும்.
பிஸ்கட்டுகள், கேக்குகள் போன்றவற்றுக்கு தற்போது 24 முதல் 25 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டு வருகிறது. இனி 17 முதல் 18 சதவீதம் வரை மட்டுமே விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. எனவே இவற்றின் விலை குறையும். சிமெண்டுக்கு 27 முதல் 32 சதவீதம் வரை விதிக்கப்பட்டு வருகிறது. இனி 17 முதல் 18 சதவீதம் வரை வரி விதிக்கப்படும்.

சொகுசு ஓட்டல்
எனவே டெலிவிஷன், வாஷிங்மிஷின், கார், சிமெண்ட், கட்டுமான பொருட்கள், அறைகலன்கள், பிஸ்கட், கேக் போன்றவற்றின் விலை குறையும். லாஜிஸ்டிக்ஸ் துறைக்கு சாதகமான நிலை உருவாகியுள்ளதால் இத்துறை வெகுவேகமாக வளரும் என்று கருதப்படுகிறது. புகையிலைப் பொருட்கள் மீதான வரி உயர்த்தப்படும். எனவே சிகரெட் போன்றவற்றின் விலை அதிகரிக்கும்.
நகைகள் மீதான வரி 2 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் நகைகளின் விலை கடுமையாக உயரும். ஏற்கனவே தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. புதிய வரி விதிப்பு அமலுக்கு வந்தால் இது மேலும் உயரும். மொபைல் போன்களுக்கு 5 சதவீத வரி விதிக்கப்படுகிறது இதை 12 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று யோசனை கூறப்பட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ளப்பட்டால் செல்போன்களின் விலை அதிகரிக்கும். மருந்துகளுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதை 12 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று யோசனை கூறப்பட்டுள்ளது.
இது ஏற்றுக்கொள்ளப்பட்டால் மருந்துகளின் விலை உயரும். ஆனால், மருந்துகளின் மீதான வரியை உயர்த்தக்கூடாது என எதிர்ப்பு எழுந்துள்ளதால் அரசு இதை மறுபரிசீலனை செய்யும் என்று தெரிகிறது. சொகுசு ஓட்டல்கள் மீது விதிக்கப்பட்டு வரும் வரி உயர்த்தப்படுகிறது. எனவே, சொகுசு ஓட்டல் அறை வாடகை அதிகரிக்கும்.
தற்போது, செய்தித்தாள் மற்றும் அச்சு ஊடகத்துக்கு மறைமுக வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடருமா அல்லது மறைமுக வரி, இத்துறை மீது விதிக்கப்படுமா? என்பது இனிமேல்தான் முடிவு செய்யப்படும். பெட்ரோலியப் பொருட்கள், உள்ளூர் அளவில் விதிக்கப்படும் கேளிக்கை வரி, பத்திரத்தீர்வை, மின்வரி, மது மீதான வரி ஆகியவை சரக்கு மற்றும் சேவை வரி வரம்புக்குள் தற்போது கொண்டுவரப்படவில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

அடுத்த நிதியாண்டு முதல் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வருவதால் மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகப்பரிமாற்றம் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. தற்போது நேர் முக மற்றும் மறைமுக வரி வாயிலாக ரூ.14.6 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்படுகிறது. இதில் மறைமுக வரிகளின் பங்கு சுமார் 34 சதவீதம். உற்பத்தி வரி மூலம் ரூ.2.8 லட்சம் கோடியும். சேவை வரி வாயிலாக ரூ.2.1 லட்சம் கோடியும் வருவாய் ஈட்டப்படுகிறது.
சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்தால் மொத்த வரி வருமானத்தில் மறைமுக வரி வருவாயின் பங்கு மேலும் அதிகரிக்கும் என்று அரசு சார்புடைய பொருளியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். வளர்ச்சியடைந்த நாடான ஆஸ்திரேலியாவில், மொத்த வரி வருவாயில் மறைமுக வரி வருவாயின் பங்கு 13 சதவீதம் மட்டுமே. இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவில், மொத்த வரி வருவாயில் மறைமுக வரி வருவாயின் பங்கை அதிகரிக்க முற்படுவது முதலாளிகளுக்கு சாதகமானது, நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு பாதகமானது என்று பொதுநல நோக்குடைய பொருளியல் வல்லுநர்கள் விமர்சித்துள்ளனர்.