99 சதவீத பொருட்களை 18 சதவீத ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் மோடி

87

99 சதவீத பொருட்களை 18 சதவீத ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மும்பையில் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, பல ஆண்டுகளாகவே நாட்டிற்கு ஜிஎஸ்டி வரி முறை தேவையாக இருந்தது என்றும், அதை அமல்படுத்தியதன் மூலம் வர்த்தகச் சந்தையில் இருந்த இருந்த முரண்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். பொருளாதாரமும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாறியிருப்பதாக அவர் கூறினார். ஜிஎஸ்டி முறைக்கு முன்னர், 65 லட்சம் வாணிப நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்திருந் ததாகவும், இந்த எண்ணிக்கை மேலும் 55 லட்சம் உயர்ந்திருப்பதாகவும் மோடி தெரிவித்தார். சாத்தியமான அளவுக்கு வணிக நிறுவனங்களுக்கு மிகவும் சுமூகமான முறையாக ஜிஎஸ்டி முறையை மாற்ற வேண்டும் என்பதே அரசின் கருத்து எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜிஎஸ்டி முறை பரந்து விரிந்த அளவில் நிறுவப்பட்டிருப்பதாகவும், பொதுமக்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் உள்ளடக்கி, 99 சதவீத பொருட்களை 18 சதவீத ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதமர் கூறினார். அரசின் பல்வேறு நலத்திட்டங்களை சுட்டிக்காட்டி பேசிய மோடி, புதிய இந்தியாவை கட்டமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.