ஜிஎஸ்டி வரியை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்த திட்டம் | ஜிஎஸ்டியை அமல்படுத்திவிட்டால், அனைத்து வரிகளும் ரத்தாகும்

155

ஜிஎஸ்டி வரியை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்த முடியாவிட்டாலும் செப்டம்பர் 16க்குள் கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் பேசிய அவர், சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வர திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார். எனவே வரியை அமல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை தீர்க்க, பல முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக கூறிய அருண் ஜெட்லி, ஜிஎஸ்டியை அமல்படுத்திவிட்டால், மத்திய மாநில அரசுகள் விதிக்கும் சுங்க வரி, சேவை வரி, வாட் உள்ளிட்ட அனைத்து வரிகளும் அகற்றப்பட்டு விடும் என்று திட்டவட்டமாக குறிப்பிட்டார். நாடு முழுவதும் ஒரே விதமான வரி விதிக்கப்படும் போது பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் வளரும் என்று சுட்டிக்காட்டிய அவர், வரும் 16ம் தேதி நடைபெறும் ஜிஎஸ்டி ஆலோசனை குழு கூட்டத்தில் வரி தொடர்பான அனைத்து பிரச்னைகளும் தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.