உடுமலை சங்கர் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில்கவுசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை!

1189

உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
உடுமலைப்பேட்டையில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பொறியியல் கல்லூரி மாணவர் சங்கர், 2016 ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவி கவுசல்யா படுகாயமடைந்து சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார். தமிழகத்தையே உலுக்கிய இந்த ஆணவக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, பாண்டித்துரை உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்தநிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதற்காக, சிறையில் அடைக்கப்பட்டிருந்த கவுசல்யாவின் பெற்றோர் உட்பட 11 பேரும் நீதிபதி அலமேலு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். தங்களுக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் என சின்னசாமி வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கொலையாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என வாதாடினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அலமேலு, கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, அவரது நண்பர் ஜெகதீசன், மைக்கேல், மணிகண்டன், செல்வகுமார் உள்ளிட்ட 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டார். ஸ்டீபன் தன்ராஜ் என்பவருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்தார். இந்த வழக்கிலிருந்து கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன்னா ஆகிய 3 பேரை விடுவித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.