பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழருக்கு விடுதலை கிடைக்குமா? : ஆளுனர் பன்வாரிலால் காலதாமதம் செய்து வருவதாக தகவல்

211

ஏழு தமிழர்கள் விடுதலையில் ஆளுநரின் முடிவு என்ன மாதிரியானதாக இருக்கும்? என அனைவரும் எதிர்பார்த்து வரும் நிலையில், கவர்னர் பன்வாரிலால் தனது முடிவை அறிவிக்க காலதாமதமாகலாம் என்று கூறப்படுகிறது.

27 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், நளினி, முருகன், ராபர்ட் பாயஸ், சாந்தன், ரவிச்சந்திரன் மற்றும் ஜெயகுமார் ஆகியோரை விடுதலைசெய்ய தமிழக அமைச்சரவை ஆளுநருக்குப் பரிந்துரை செய்துள்ளது, இதனையடுத்து, ஆளுநர் மாளிகையில், தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்கலாமா? அல்லது நிராகரிக்கலாமா? என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. 7 பேர் விடுதலைக்கு ஆட்சேபணையில்லை என்று கூறி வந்த காங்கிரஸ் தற்போது பல்டி அடித்து, 7 பேரையும் விடுவிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. இந்த நிலையில், தேசிய பாதுகாப்பு கருதியும், 7 பேரையும் விடுவிப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடக்கூடாது என்பதால், மத்திய அரசுக்கும் 7 பேரையும் விடுவிப்பதில் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து, 7 பேர் விடுதலை தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையைக் கேட்டுப் பெற முடிவு செய்துள்ள ஆளுனர் பன்வாரிலால், மாநில அரசின் பரிந்துரையை எதிர்த்து யாரேனும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால், அதைக் காரணம் காட்டி, தமிழக அரசின் தீர்மானத்தை நிராகரிக்கவும் திட்டமிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து, 7 பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க, ஆளுனர் பன்வாரிலால் கால தாமதம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.