ஆளுனர் கிரண்பேடிக்கு எதிராக காரைக்காலில் இன்று நடைபெற்று வரும் முழுஅடைப்பு போராட்டத்தினால் மக்களின் இயல்பு…

294

ஆளுனர் கிரண்பேடிக்கு எதிராக காரைக்காலில் இன்று நடைபெற்று வரும் முழுஅடைப்பு போராட்டத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதலமைச்சருக்கும் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது. பாஜகவை சேர்ந்த 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், துணைநிலை ஆளுநரை திரும்ப பெறக் கோரியும், புதுச்சேரியில் கடந்த சனிக்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலும், அனைத்துகட்சிகள் சார்பில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் ஆளும்கட்சியான காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துகட்சிகளும் பங்கேற்றுள்ளன. இன்று காலை முதல் தொடங்கி உள்ள இந்த முழுஅடைப்பு காரணமாக காரைக்காலில் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் இயக்கப்படாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.