கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் மேலும் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் 3 பேரை விடுதலை செய்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு சபர்மதி விரைவு ரெயிலின் இரண்டு பெட்டிகள் தீவைக்கப்பட்டன. இதில் ரெயிலில் பயணம் செய்த 59 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து குஜராத்தில் வெடித்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும், சிறுபான்மையினரும் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ரெயில் எரிப்பு தொடர்பான வழக்கை விசாரித்து வந்த அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது. இதில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், ஏற்கனவே குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட 3 பேரை விடுதலை செய்தும் நீதிபதி எச்.சி.வோரா தீர்ப்பளித்துள்ளார்.

தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் ரெயிலில் தீ வைப்பதற்கு சதித்திட்டம் தீட்டியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அரசு சார்பில் ஆலோசனை செய்து மனுதாக்கல் செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.