கோபிசெட்டிபாளையம் அருகே ஏரிக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி, அமைச்சர் கருப்பணன் மற்றும் அந்தியூர் எம்எல்ஏ ராஜாகிருஷ்ணனை விவசாயிகள் மற்றும் மீனவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பி.மேட்டுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அனந்தசாகரம் ஏரிக்கு, வீணாக செல்லும் பவானி நீரை திருப்பிவிட வேண்டும் என அப்பகுதி மக்கள், தாரை தப்பட்டைகள் அடித்து, கொட்டு முழக்கத்துடன் ஊர்வலமாகச் சென்று, அமைச்சர் கருப்பணனிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதற்கு அமைச்சர் பதில் எதுவும் கூறவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, குறை தீர்க்கும் கூட்டம் முடிந்து வெளியே வந்த அமைச்சர் கருப்பணன் மற்றும் அந்தியூர் எம்எல்ஏ ராஜாகிருஷ்ணனை விவசாயிகள் மற்றும் மீனவர்கள் முற்றுகையிட்டு, கோஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க முயன்றபோது, இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டு அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர், போராட்டக்காரர்களிடம் இருந்து அமைச்சர் மற்றும் எம்எல்ஏவை மீட்டு காவல்துறையினர் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.