சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியீடு..!

223

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில்களில் இருந்த தொன்மையான சிலைகள் மர்மமான முறையில் காணாமல் போய் உள்ளன. இதுகுறித்த வழக்குகளை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரித்து வருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்றையதினம் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு எடுத்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.

ஓராண்டாகியும் விசாரணை அறிக்கையை பொன்.மாணிக்கவேல் தாக்கல் செய்யவில்லை என சுட்டிக் காட்டிய தமிழக அரசு, அவரது விசாரணையில் திருப்தி இல்லை என்றும் அதிருப்தியை வெளிப்படுத்திருந்தது. இதனையடுத்து தமிழக அரசின் கொள்கை முடிவு தொடர்பான ஆவணங்களை ஆகஸ்ட் 8ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.