காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு எதிரொலி…

260

உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதித்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசை மத்திய அரசு கலைக்க வேண்டும் என த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் த.மா.க நிர்வாகியின் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் காவேரி பிரச்சனைக்காக தேவகவுடா காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு, இப்பிரச்சனையை அரசியலாக்க முயல்வதாக தெரிவித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பை மூன்றாவது முறையாக அவமதித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட மறுத்துள்ள கர்நாடக அரசை மத்திய அரசு கலைக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார். தொடர்ந்து பேசிய அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, விரைவில் உடல் நலம் பெற்று, மக்கள் பணிகளை சிறப்பாக செய்யவேண்டும் என, தான் இறைவனிடம் வேண்டுவதாக அவர் தெரிவித்தார்.