கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 8 ஆயிரத்து 316 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது.

கேரளாவில் கொட்டித்தீர்த்த கனமழையால் இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, மலப்புரம் மாவட்டங்களில் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலச்சரவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 440 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு 50 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் நேற்று கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் முதலமைச்சர் பினராயி விஜயனுடன் விமானத்தில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் வெள்ளப் பாதிப்புக்கு உடனடி நிவாரணமாக 100 கோடி ரூபாய் வழங்கப்படும் என ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். வெள்ளத்தில் பாஸ்போர்டுகளை இழந்தோருக்கு புதிய மாற்று பாஸ்போர்ட்கள் இலவசமாக வழங்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார். நேற்று மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் 14, 15 ஆம் தேதி வயநாடு, இடுக்கி மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கனமழையால் 8 ஆயிரத்து 316 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.