என்னதான் கிரிக்கெட் என்பது இந்தியர்களால் விரும்பி பார்க்கப்பட்டாலும், உலகளவில் கால்பந்து விளையாட்டிற்கே ரசிகர்கள் அதிகம். உலகம் முழுவதும் குவிந்திருக்கும் கோடான கோடி கால்பந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நாளை துவங்க உள்ளது. ஜூலை 15-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த உலகக்கோப்பை போட்டியை காண உலகம் முழுவதும் உள்ள கால்பந்தாட்ட ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த தொடரில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாட உள்ளனர்.

ஏ பிரிவில் ரஷியா, சவூதி அரேபியா, எகிப்து, உருகுவே அணிகளும், பி பிரிவில், போர்ச்சுகல், ஸ்பெயின், மொராக்கோ, ஈரான் அணிகளும் விளையாடுகின்றன. சி பிரிவில், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பெரு, டென்மார்க் அணிகளும், டி பிரிவில் அர்ஜெண்டினா, ஐஸ்லாந்து, குரேஷியா, நைஜீரியா ஆகிய அணிகள் விளையாடுகின்றன. அதே போல், இ பிரிவில், ப்ரேசில், சுவிட்சர்லாந்து, கோஸ்டா ரிகா, செர்பியா அணிகளும், எஃப் பிரிவில், ஜெர்மனி, மெக்சிகோ, சுவீடன், தென் கொரியா அணிகள் மோதுகின்றன.மேலும் ஜி பிரிவில் பெல்ஜியம், பனாமா, துனிசியா, இங்கிலாந்து அணிகளும், எச் பிரிவில், போலந்து, செனகல், கொலம்பியா, ஜப்பான் அணிகள் விளையாடுகின்றன.

8 பிரிவுகளில் முதலிடம் பிடிக்கும் அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி, அடுத்ததாக அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளுக்கு முன்னேறும். 4 முறை உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி அணி 1958 ஆம் ஆண்டிலும், இந்த உலகக்கோப்பை போட்டியிலும் தகுதி பெறாதது குறிப்பிடத்தக்கது. இத்தாலியை போல், அமெரிக்க அணியும் உலகக்கோப்பைக்கு தகுதி பெறவில்லை. ஆனால் அமெரிக்க ரசிகர்கள் ரொனால்டோ, மெஸ்ஸி போன்ற நட்சத்திர வீரர்களின் அதிரடி ஆட்டங்களை காண்பதற்காக அதிகளவில் ரஷியாவை நோக்கி படையெடுத்துள்ளனர். இதே போல், நடப்பு சாம்பியனான ஜெர்மனி மீண்டும் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையுடன் அந்நாட்டு ரசிகர்களும் ரஷியாவுக்கு அதிகம் சென்றுள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பதால் இந்த தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என நம்பலாம்.பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் அடுத்த ஒரு மாதத்திற்கு உலக ரசிகர்களை குதூகலப்படுத்த இருக்கும் இந்த கால்பந்தாட்ட தொடரில் கோப்பையை கைப்பற்றி ரசிகர்களின் மனக்கோட்டைக்குள் நுழைப்போகும் அணி எது? என்பதை அறிய நாம் ஜூலை 15 ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.