100 ஆண்டுகளில் காணாத வெள்ளம் : 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

482

கேரளாவில் 7 லட்சத்து 24 ஆயிரத்து 649 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

100 ஆண்டுகளில் காணாத கனமழை மற்றும் வெள்ளத்தை கேரள மாநிலம் சந்தித்தது. 24 மணி நேரமும் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருந்தபோதும், நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் இதுவரை 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் கட்டடங்களில் இருந்து 22 ஆயிரத்து 34 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றார்.

வீடுகளை இழந்து வாடுபவர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 7 லட்சத்து 24 ஆயிரத்து 649 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்தார். மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு, திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.