கோவை, கரூர் மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை காரணமாக வாழைத்தோட்ட ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், காமராஜர் நகர், காந்தி நகர், எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், பொதுமக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். அரசு போக்குவரத்து பணிமனை வெள்ளத்தில் மூழ்கியது. வால்பாறை -பொள்ளாச்சி சாலையில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளை மாவட்ட வருவாய்துறை மற்றம் வட்டாட்சியர் அதிகாரிகள், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட பலர் பார்வையிட்டனர்.

மேட்டூர், பவானி, அமராவதி ஆகிய 3 அணைகளில் இருந்து மொத்தம் இரண்டரை லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால், கரூர் மாவட்ட காவேரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள், சமுதாயம் கூடம், பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், மாயனூர் அணைக்கு நீர்வத்து 2 லட்சத்து 14 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால், அணையில் இருந்து 2 லட்சத்து 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.