பழைய கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு..!

189

நாமக்கல், திருப்பூர், சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகள் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவேரியில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால்,சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், திட்டுக்காட்டூர், அக்கரை ஜெயங்கொண்டபட்டினம், கீழகுண்டலபாடி ஆகிய கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்து தனித்தீவுகளை போல காட்சி அளிக்கிறது. கடும் வெள்ளம் காரணமாக இங்குள்ள கிராம மக்கள், பல்வேறு ஊர்களுக்கு வந்து செல்வதற்கு படகுகளையே பயன்படுத்தி வருகின்றனர். இதேபோன்று, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஆற்றங்கரையோரத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். 450-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆணைப்பாளையம் பகுதியில் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் நஞ்சைதவுட்டுப்பாளையம் காவேரி கரையோர பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து, ஆடு, மாடு மற்றும் தனது உடமைகளை எடுத்துக்கொண்டு அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.