100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

147

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ள சம்பவம் மீனவ மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக ரோந்துச் சென்ற இலங்கை கடற்படையினர், எல்லைத்தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி, ராமேஸ்வரம் மீனவர்களை துப்பாக்கி முனையில் விரட்டியடித்துள்ளனர். மேலும், மீனவர்களின் மீன்பிடி சாதனங்கள், வலைகள் மற்றும் விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, ராமேஸ்வரம் மீனவர்கள் அனைவரும் மீன்பிடிக்க இயலாமல், வெறுங்கையுடன் கரை திரும்பியுள்ளனர். இந்தநிலையில், இலங்கை கடற்படை தாக்குதலில் படுகாயமடைந்த ரியான் என்ற மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து, தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட படகுகளை எடுத்துவரச் சென்ற மீட்புக்குழுவினர், காரைநகர் துறைமுகத்தில் இருந்து 9 படகுகளுடன் தாயகம் புறப்பட்டனர். இன்று மாலை படகுகளுடன் மீட்புக்குழுவினர் ராமேஸ்வரம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.