கச்சத் தீவு அருகே மீன் பிடித்த 11 இந்திய மீனவர்கள் கைது

69

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 11 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்தனர்.

கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியத்தால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்னர் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்கள் கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இன்று காலை அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி அவர்களை கைது செய்ததுடன், 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 11 பேரும் காங்கேசன் துறைமுகத்தில் உள்ள கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.