எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 4 பேர் கைது!

244

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி நாகை மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படை கைதுசெய்துள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெடுந்தீவு, பருத்தித்துறை உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படை கைதுசெய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்தநிலையில், நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த மீனவர்கள் கபிலன், ராமசாமி, தேவராயன் மற்றும் கோவிந்தசாமி ஆகியோர் இலங்கை பருத்தித்துறை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து, அவர்கள் பயன்படுத்திய ஒரு நாட்டு படகையும் அவர்கள் சிறைபிடித்தனர். இதையடுத்து கைதுசெய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து கைதுசெய்யப்படுவது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.