இலங்கை சிறையிலிருந்த 76 தமிழக மீனவர்கள் விடுதலை..!

274

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 76 தமிழக மீனவர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்துள்ளது. இதனையடுத்து மீனவர்கள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து வருகிறது. தற்போது இலங்கை சிறைகளில் 80 மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 160 படகுகளும் இலங்கை அரசின் வசம் உள்ளன. இந்த நிலையில், இந்திய பெருங்கடல் மாநாடு இலங்கையில் இன்று தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார். இதை முன்னிட்டு நல்லெண்ண நடவடிக்கையாக, தமிழக மீனவர்கள் 76 பேரை இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது. மீனவர்கள் வரும் சனிக்கிழமை தமிழகம் திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக யாழ்பானம் மற்றும் ஊர்காவல்துறை நீதிமன்றங்களில் இலங்கை கடற்படையினர் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதன் அடிப்படையில், தமிழக மீனவர்கள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.