எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக்கூறி இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்துள்ளனர்..!

186

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக்கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் படகுகளுடன் சிறைபிடித்துச் சென்றுள்ளனர்.

புதுக்கோட்டை மீனவர்கள் 7 பேர் நேற்றிரவு 2 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் இலங்கை கடற்படையினரின் ராட்சத ரோந்து படகு கொண்டு விசைப்படகு மீது மோதினர். இதனையடுத்து எல்லைத்தாண்டி வந்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரையும் சிறைபிடித்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 7 பேரையும் காங்கேசன்துறை கடற்படை முகாம்க்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை கடற்படையினரின் அடாவடி நடவடிக்கையால், ஒரு படகு முற்றிலும் சேதமான நிலையில் காரைநகர் கடற்படை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அவர்களின் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.