இலங்கை சிறையிலிருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 77 பேர் சொந்த ஊர் திரும்பினர். விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீனவர்கள் நன்றி தெரிவிப்பு.

241

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 77 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக்கூறி நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களைச்சேர்ந்த 77 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். இதையடுத்து, மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்தியது. இந்நிலையில், சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து இந்திய கடலோர காவல்படையிடம் தமிழக மீனவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர், காரைக்கால் துறைமுகம் வந்த அவர்கள் அனைவரும், அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். தங்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.

இதனிடையே, மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பது தொடர்பாக தமிழக மீனவர்களுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
இதற்காக நாகை, புதுக்கோட்டை, புதுச்சேரி மீனவ சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை டெல்லியில் இன்று சந்தித்து பேச்சு நடத்த உள்ளனர்.