சென்னை கொடுங்கையூரில் பேக்கரியில் பயங்கர தீ விபத்து : தீயணைப்பு வீரர் உயிரிழப்பு !

347

கொடுங்கையூரில் பூட்டிக் கிடந்த பேக்கரியில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த வீரர் ஒருவர் பரிதாபமாக பலியானார். படுகாயமடைந்த 40க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சென்னை கொடுங்கையூரில் பூட்டிக் கிடந்த பேக்கரியில் நேற்று இரவு 11 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அந்தத் தீ அருகிலிருந்த ஏ.டி.எம். மையத்திற்கும் பரவியதில் ஏ.டி.எம். முழுவதும் எரிந்து சாம்பலானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் பூட்டியிருந்த பேக்கரியை உடைத்து திறக்க முற்பட்டனர். அப்போது கடைக்குள் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் தீயணைப்பு வீரர்கள், காவலர்கள், பொதுமக்கள் உட்பட மொத்தம் 40 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதில், சிகிச்சை பலனின்றி தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்தார். தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.