அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ காலமானார்…

203

கியூபாவின் புரட்சியாளரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ காலமானார். அவருக்கு வயது 90.
1926 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி பிறந்த ஃபிடல் காஸ்ட்ரோ பள்ளி பருவத்தில் விளையாட்டிலும், அரசியலிலும் ஆர்வம் செலுத்தினார். 1945 ஆம் ஆண்டு ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்த அவர் இடது சாரி கொள்கையில் ஈர்க்கப்பட்டு படிப்படியாக கியூபாவின் வளர்ச்சிக்கு பாடுபட்டார்.
கியூபாவில் புரட்சியை வழிநடத்திய ஃபிடல் காஸ்ட்ரோ 1959 ஆம் ஆண்டு முதல் 1976 வரை அந்நாட்டின் பிரதமராகவும், 1976 ஆம் ஆண்டு முதல் 2008 வரை அதிபராகவும் பதவி வகித்தவர். 49 ஆண்டுகள் கியூபாவை ஆட்சி செய்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2008 ஆம் ஆண்டு பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து, அவரது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ அந்நாட்டின் அதிபராக பதவியேற்றார்.
கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்த அவர் இன்று காலமானார். தனது சகோதரர் உயிரிழந்த செய்தியை அதிபர் ரவுல் காஸ்ட்ரோ தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு அறிவித்தார். பிடல் காஸ்ட்ரோ மறைவால் அந்நாட்டு மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தங்கள் வழிகாட்டியாகவும், தலைசிறந்த தலைவனாகவும் இருந்தவரை இழந்து விட்டதாக அந்நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.