தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தல். திருவாரூரில் உயிரிழந்த விவசாயி உடலுடன் கொட்டும்பனியில் விடியவிடிய போராட்டம்.

196

மத்திய, மாநில அரசுகள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவாரூரில் உயிரிழந்த விவசாயி உடலுடன் கொட்டும் பனியில் விடிய விடிய விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒருபகுதியாக, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்முன் நடைபெற்ற போராட்டத்தின்போது கோவிலூரை சேர்ந்த விவசாயி மகாலிங்கம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். உயிரிழந்த விவசாயி மகாலிங்கத்தின் உடலுடன் விவசாயிகள் விடிய விடிய தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

இதனிடையே, அமைச்சர் காமராஜ் இந்த விவகாரம் தொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனுடன் தொலைபேசியதை அடுத்து, விவசாயிகள் முதலமைச்சரை சந்தித்துபேச ஏற்பாடு செய்வதாக கூறப்பட்டது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டம் நள்ளிரவு விலக்கி கொள்ளப்பட்டது. அத்துடன், விவசாயி மகாலிங்கத்தின் உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது.

இதேபோல், நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்முன் விவசாயிகள் கொட்டும் பனியிலும் அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டுவிட்டு, படுத்துறங்கி விடிய விடிய தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்போராட்டம் காரணமாக, அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.