விவசாயக்கடனை அடைக்க முடியாமல் விவசாயி குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை.

365

ஆத்தூர் அருகே விவசாயக்கடனை அடைக்க முடியாமல், விவசாயி குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புலிகாடு பகுதியைச் சேர்ந்த விவசாயி அர்ச்சுனன் என்பவர், விவசாயத்திற்காக பல்வேறு இடங்களில் பணம் கடனாக பெற்றுள்ளார். இந்தக் கடனை அடைக்க முடியாதநிலையில், மனம் உடைந்த அர்ச்சுனன், தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். இதனையடுத்து, தண்ணீரில் பூச்சிக்கொல்லி மருந்தைக் கலந்து தனது மனைவி மற்றும் 2 மகன்களுக்கு கொடுத்த அர்ச்சுனன், தானும் அதனைக் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த நிலையில், மருந்தைக் குடித்த சிறுவன் மயக்கம் தெளிந்து, வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து சத்தம் போட்டுள்ளான்.இதனைக்கண்ட அருகில் வசிப்பவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துவிட்டு, சிறுவனை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். உடனே விரைந்து சென்று 3 பேரின் சடலங்களை மீட்ட காவல்துறையினர், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.