ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடர்வதா, வேண்டாமா என்பது குறித்து, பிரிட்டனில் இன்று பொது வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

248

28 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் அங்கம் வகிக்கிறது. அதில் அங்கம் வகிப்பதற்கு எதிராக பிரிட்டனில் ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்து பொதுமக்களின் கருத்தை அறிவதற்கான பொதுவாக்கெடுப்பு இன்று நடக்கிறது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என பெரும்பான்மையானோர், ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில், அது, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நிதிச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அன்னியச் செலாவணி மதிப்பிலும், ஏற்றத்தாழ்வு உண்டாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் உடனான, இந்தியாவின் பரஸ்பர வர்த்தகம் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. ஐரோப்பிய நிறுவனங்கள், அதிக அளவில் இந்தியாவில் முதலீடு மேற்கொண்டுள்ளன. அதனால், பிரிட்டன் எடுக்கும் முடிவு, இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறினால், அதை பின்பற்றி மேலும் பல நாடுகள் வெளியேறலாம் எனவும், இது, சர்வதேச நிதிச் சந்தையில் சங்கிலித் தொடர் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்