அரசு சார்பில் நாளை ஆசிரியர் தின கொண்டாட்டம்..!

159

சென்னையில் நாளை நடைபெறும் ஆசிரியர் தின விழாவில், 363 ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் பழனிச்சாமி டாக்டர் ராதா கிருஷ்ணன் விருதுகளை வழங்கி கௌரவிக்கிறார். முதன்முறையாக, 960 மாணவர்களுக்கு காமராஜர் விருதுகளும் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் ஆசிரியர் தினவிழா நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ராதாகிருஷ்ணன் விருதுக்கு இந்த ஆண்டு 363 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற 960 மாணவர்களுக்கு முதல் முறையாக காமராஜர் விருது வழங்கப்படுகிறது.

சென்னை கலைவாணர் அரங்கில் நாளை பிற்பகல் நடைபெறும் ஆசிரியர் தின விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் விருதுகளை வழங்குகிறார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துக்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.