30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா திறப்பு..!

180

விவசாயிகள் நலன் மேம்பட, தேவையான திட்டங்களை அதிமுக அரசு அமல்படுத்தும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்தார்.

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டிணம் அருகே அனுப்பூரில் 30 லட்ச ரூபாய் செலவில் அம்மா பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறுவர் பூங்காவை முதலமைச்சர் பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார். பூங்காவில் உள்ள உடற்பயிற்சி கூடத்தையும் திறந்து வைத்த முதலமைச்சர் பழனிச்சாமி, அங்கு உடற்பயிற்சி செய்ததுடன், இறகுப்பந்து விளையாடினார். இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அம்மா மாளிகையையும் முதலமைச்சர் பழனிச்சாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது, சேலம் மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி, கிராம மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க வேண்டும் என்பதே அதிமுக அரசின் லட்சியம் என்று தெரிவித்தார். நகர மக்களுக்கு கிடைக்கும் வசதிகள் கிராம மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும் முதலமைச்சர் பழனிச்சாமி கூறினார். விவசாயி நலன் மேம்பட அரசு துணை நிற்கும் என்று கூறிய அவர், அதற்கு தேவையான திட்டங்களை அரசு அமல்படுத்தும் என்றும் உறுதியளித்தார்.