முதலமைச்சர் பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

324

நெடுஞ்சாலைத் துறை டெண்டரில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்பட்ட புகாரில் முதலமைச்சர் பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த முறைகேடு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, நெடுஞ்சாலைத் துறை டெண்டரில் மோசடி என முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கேள்வி எழுப்பினார்.

இதற்கு, கடந்த ஜூன் 22ம் தேதியே விசாரணை தொடங்கியதாக லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மீது 2 மாதம் முன்பு தொடங்கிய விசாரணை இன்னும் முடியவில்லையா ? என்று சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பியது. இதனையடுத்து, இந்த விவகாரத்தில், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என செப்டம்பர் 3-ஆம் தேதிக்குள் தமிழக அரசும், லஞ்ச ஒழிப்புத்துறையும் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.