சிலைக் கடத்தல் வழக்கு சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை..!

262

சிலைக் கடத்தல் வழக்கு தொடர்பாக, ஐஜி.பொன்மாணிக்கவேல் ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று விசாரணையை தொடங்குகிறார்.

தமிழகத்தில் சிலை கடத்தல் சம்பந்தப்பட்ட வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு கடந்த வாரம் அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், சிபிஐ விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இதனிடையே, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உற்சவர் சிலைகள் மாற்றப்பட்டுள்ளதாக, ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையில் செயல்படும் சிலைக் கடத்தல் பிரிவு வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்தநிலையில், சிலைக் கடத்தல் தொடர்பாக ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று அவர் தனது விசாரணையை தொடங்குகிறார். இதனால், அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் ஊழியர்கள் கலங்கம் அடைந்துள்ளனர். இதனிடையே, டிவிஎஸ் குழும நிறுவனத் தலைவரும், ஸ்ரீரங்கம் கோயில் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவராக இருந்த வேணு சீனிவாசன் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.