பூதாகரமாக வெடிக்கும் குட்கா ஊழல் விவகாரம் : சிபிஐயை தொடர்ந்து அமலாக்கத்துறையும் அதிரடி

258

குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.

தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்ய அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும், டிஜிபி ராஜேந்திரன் லஞ்சம் வாங்கியதாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க வழக்கு தொடர்ந்தது. மேலும் வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் எனவும் தி.மு.க கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்று வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோர் வீடுகளில் 2 நாட்களுக்கு முன் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது.

இந்நிலையில் குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணையை தொடங்கியுள்ளது.அத்துடன் ஜார்ஜ் பத்திரிகையாளர் சந்திப்பின் போது, வெளியிட்ட பெயர்கள் விபரங்களையும் சேகரித்து சிபிஐ விசாரணை நடத்துவதால்,மேலும் பல அதிகாரிகள் சிக்குவார்கள் என தெரிகிறது. குட்கா விவகாரத்தில் ஏற்கனவே சிபிஐ கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது அமலாக்கத்துறையும் விசாரணை தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.