குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் : வீடுகளை சேதப்படுத்தியதால் கிராம மக்கள் பீதி

127

குன்னூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் வீடுகளை சேதப்படுத்தியதால், கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மூப்பர்காடு கிராமத்தை யொட்டி, சுமார் 100 ஏக்கர் காபி தோட்டம் உள்ளது. இரண்டு தனியார் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சொந்தமாக இந்த காபி தோட்டம் பராமரிக்கப்படாமல் முட்புதர்களுடன் காணப்படுகிறது. இந்தநிலையில், மூப்பர்காடு கிராமத்தில் நுழைந்த காட்டுயானைகள் குடியிருப்புகளை சேதப்படுத்தியது. இதனால் செய்வது அறியாமல் கிராம மக்கள் திகைத்து போய்வுள்ளனர். வன விலங்குகளை விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் குற்றச்சாட்டினர்.

இதனிடையே கடந்த 4 நாட்களுக்கு முன்பு காட்டெருமை ஒன்று மூப்பர்காடு முனீஸ்வரன் கோயில் அருகே நடமாடி கொண்டிருந்தது. அப்போது, 10 அடி உயரம் கொண்ட பாறையில் இருந்து காட்டெருமை தவறி கீழே விழுந்தது. கழுத்தில் படுகாயம் அடைந்த காட்டெருமைக்கு, உரிய சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முன்வரவில்லை என கிராம மக்கள் குற்றச்சாட்டினர். இந்தநிலையில், தாங்களே முன்வந்து காட்டெருமைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.