மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை..!

76

2019 மக்களவை தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்க, தேர்தல் ஆணையம் சார்பில் நடைபெறும் மாநில தேர்தல் அதிகாரிகளுடனான இரண்டு நாள் கருத்தரங்கம் டெல்லியில் இன்று தொடங்குகிறது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பதவிக்காலம் மே மாதம் முடிவடைவதால், வரும் ஏப்ரல், மே மாதங்களில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான, முன் தயாரிப்பு பணிகளில், தலைமை தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, டெல்லியில், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனான இரண்டு நாள் கருத்தரங்கிற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இதனையடுத்து, டெல்லியில் இன்றும், நாளையும் நடைபெறும் இந்த கருத்தரங்கில், நாடாளுமன்ற தேர்தல் முன் தயாரிப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு, அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு, தலைமை தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கூட்டத்தில், மக்களவை தேர்தலில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும், தேவைப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணிக்கை, வாக்குச்சாவடி பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தபபட உள்ளதாக தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.