5 மாநில அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை | சட்டத்தை மீறினால் கைகட்டி நிற்கப்போவதில்லை.

96

ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தல்களின்போது, தேர்தல் சட்டங்கள் அல்லது தேர்தல் நடத்தை நெறிகளை மீறி நடந்துகொள்ளும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
கடந்த மாதம் உச்சநீதிமன்றம் வெளியிட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த உத்தரவில் மதம், சாதி, ஆகியவற்றின் அடிப்படையில் எந்த அரசியல்வாதியும் வாக்குக் கோரக்கூடாது என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த உச்சநீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி தேர்தல் ஆணையம்
அரசியல் கட்சிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், சமூகத்தில் வெவ்வேறு பிரிவினர்கள் இடையே பிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மத ரீதியான கருத்துக்களை கூறுவதில் இருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. தேர்தல் சட்டங்கள் மீறப்படுவதைப் பார்த்துக்கொண்டு கைகட்டி நிற்கப்போவதில்லை என்றும் அது எச்சரித்துள்ளது. தேர்தல்கள் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெற தேர்தல்களின் போது அமைதியான சூழல் மிக அவசியம் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.