வாக்குப்பதிவுக்கான ஏற்பாடு பணிகள் தீவிரம் !

116

தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெறுவதையொட்டி, அந்தந்த தொகுதிகளுக்கு வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 96 மக்களவைத் தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.தமிழகத்தில் மொத்தமுள்ள 67 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில், வாக்கு இயந்திரங்கள் பொறுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தென் சென்னை, வடசென்னை, மத்திய சென்னை ஆகிய தொகுதிகளில் வாக்கு இயங்திரங்கள் பொறுத்துவதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் இருந்து அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனுடன் கட்டுப்பாட்டு கருவியும், விவிபேட் இயந்திரமும் சேர்ந்து அனுப்பி வைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோன்று பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் ஆயிரத்து 692 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோட்டூர் சாலையில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள், அந்தந்த வாக்குச்சவாடிகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக லாரிகளில் ஏற்றப்பட்ட வாக்கு இயந்திரங்கள், தார்பாய்கள் கொண்டு மூடி எடுத்து செல்லப்படுகின்றன.

நெல்லை மற்றும் தென்காசி மக்களவைத் தொகுதியில், மொத்தம் 2ஆயிரத்து, 979 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பாளையங்கோட்டை ஆயுதப் படை மைதானத்தில் இருந்து, மாவட்டம் மற்றும் மாநகரம் வாரியாக வாக்கு இயந்திரங்கள் பிரிக்கப்பட்டு வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டன. இதில் வாக்கு இயந்திரம், வி.வி.பேட் இயந்திரம், அழியாத மை, பேப்பர் உள்ளிட்ட வாக்குப் பதிவுக்கு தேவையான அனைத்து உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.