சட்டீஸ்கரில், தேர்தலை நிறுத்தும் வகையில் தாண்டேவாடா பகுதியில் நக்சலைட்கள் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதால் பதற்றம் நிலவியது.

சட்டீஸ்கர் மாநிலத்தில், ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நேருக்கு நேர் போட்டியிடுகின்றன. நக்சல் பாதிப்புள்ள 8 மாவட்டங்களின் 18 தொகுதிகளில் முதல் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தேர்தலுக்காக மொத்தம் 4 ஆயிரத்து 336 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுடன், மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இந்த தேர்தலில் 31 லட்சத்து 79 ஆயிரத்து 520 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.

மாநில முழுவதும் இதுவரை 20 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மோஹ்லா-மான்பூர், அண்டாகர், பானுபிரதாப்பூர், தண்டேவாடா, பிஜாப்பூர் உள்பட 10 தொகுதிகளில் பிற்பகல் 3 மணி வரையும், ராஜ்நந்த்கான் உள்ளிட்ட 8 தொகுதிகளில் 5 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆளில்லா விமானங்கள் மூலம் நக்சலைட்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அசம்பாவிதங்களை தவிர்க்க துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், தேர்தலை நிறுத்தும் வகையில், தாண்டேவாடா பகுதியில் நக்சலைட்கள் குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.

ஆனால் பாதுகாப்பு படையினர் திரும்பி தாக்கும் முன் அவர்கள் தப்பிஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் எந்த விதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதனால் அங்கு தேர்தல் 30 நிமிடம் தாமதமாக தொடங்கியது. சட்டிஸ்கரில் நேற்று 6 இடங்களில் குண்டு வெடித்ததில், பாதுகாப்பு படை வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.