கூட்டுறவு சங்க தேர்தல் முடிவுகள் திடீரென நிறுத்தம்…

262

இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த கூட்டுறவு சங்க தேர்தல் முடிவுகள் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன….

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதனால் கூட்டுறவு சங்க தேர்தல் முடிவுகள் வெளியிடுவதில் சிக்கல் உருவானது. இதனிடையே வழக்கு நிலுவையில் உள்ள கூட்டுறவு சங்கங்களை தவிர்த்து பிற சங்கங்களுக்கான தேர்தல் முடிவுகளை வெளியிட நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனையடுத்து இரண்டாம் நிலையிலுள்ள சங்கங்களுக்கான தலைவர், துணைத் தலைவர் தேர்தல் முடிவுகளும், மூன்று மற்றும் நான்காவது நிலையில் உள்ள சங்கங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகளும் இன்று வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்தநிலையில், நிர்வாக காரணங்களுக்காக கூட்டுறவு சங்க தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்றைய தினம் வெளியாக இருந்த கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.