ஜக்கி வாசுதேவ் பிடியில் இருந்து கோவை சகோதரிகள் மீட்கப்படுவார்களா? ‘தலைக்கு ‘மொட்டையடித்து அலங்கோலம்’ – பெற்றோர் கண்ணீர்!

584

கோவை, ஆக.04–
கோவை ஈஷா யோகா மையத்திலிருந்து சகோதரிகள் 2 பேர் மீட்கப்படுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக அவர்களது பெற்றோர் மாவட்ட எஸ்.பி யிடம் புகார் அளித்துள்ளனர்.
கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் பிரபலமான ஈஷா யோகா மையம் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனராக சத்குரு என அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ் (வயது 60) இருந்து வருகிறார். மைசூரை சேர்ந்த இவர் இந்த ஆசிரமத்தை நிறுவி படிப்படியாக வளர்த்தார். இவரது இயற்பெயர் ஜகதீஷ் என்பதாகும். இவரது பெற்றோர் டாக்டர். வாசுதேவ்– சுசிலா ஆகும்.
ஜகதீஷ் என்ற தனது பெயரை சுருக்கி ஜக்கி எனவும் தந்தை பெயரையும் பின்னால் சேர்த்து ஜக்கி வாசுதேவ் என வைத்து கொண்டார். ஜக்கியின் தந்தை கண் டாக்டர் ஆவார். ரெயில்வேயில் பணியாற்றினார்.
12 வயதிலேயே ஜக்கி வாசுதேவ் அருகிலுள்ள காடு மலை என சுற்றி திரிந்தார். பின்னர் மல்லாடிகல்லி ராகவேந்திர சாமியாரிடம் சீடராக சேர்ந்து யோகா கலையை கற்றார். சாகசப் பிரியரான இவர் காடு, மலைகளில் மோட்டார் சைக்கிளில் வலம் வருவார். இது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.

புகார்
பள்ளி படிப்பை முடித்த பின்னர் மைசூர் பல்கலைகழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பட்ட படிப்பு பெற்றார். இதன் பின்னர் ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டு ஆசிரமங்களை நிறுவினார். கோவையில் உள்ள இவரது ஆசிரமத்துக்கு தினமும் ஏராளமான பொது மக்கள் வந்து செல்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் வருகை தருகிறார்கள்.
இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, லெபனான், சிங்கப்பூர், மலேசியா, கனடா, உகாண்டா, சீனா, நேபாளம் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இந்த ஆசிரமத்துக்கு கிளைகள் உள்ளன.
இந்நிலையில் தான் இந்த ஆசிரமத்தின் மீது கோவை வடவள்ளியை சேர்ந்த பெற்றோர் எஸ்.காமராஜ்– சத்திய ஜோதி ஆகியோர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர். தங்களது மகள்கள் கீதா (வயது 34), லதா (வயது 31) இருவரும் ஆசிரமத்தில் சிக்கி கொண்டுள்ளதாக அவர்கள் மாவட்ட எஸ்.பி.ஆர்.வி ரம்யா பாரதியிடம் புகார் மனு அளித்துள்ளனர். இதையடுத்து பேரூர் டி.எஸ்.பி. முதல்கட்ட விசாரணை நடத்தி உள்ளார்.

மனமாற்றம்
ஆசிரமத்தில் தங்கள் மகள்கள் தலை மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் வெள்ளை உடையில் துறவி கோலத்தில் அலங்கோலமாக இருப்பதாக அவர்களது பெற்றோர் கண்ணீர் மல்க கூறியுள்ளனர். அத்துடன் துறவு நிலைக்கு மாறுமாறு அவர்கள் மனமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினர்.
போலீசில் புகார் செய்யப்பட்டதை அடுத்து ஈஷா யோகா ஆசிரமத்தில் இருந்து கீதா, லதா ஆகிய இருவரும் மாவட்ட எஸ்.பி. யை சந்தித்து விளக்கம் அளித்தனர். யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் சொந்த விருப்பத்தின் பேரிலேயே ஆசிரமத்தில் தங்கி உள்ளதாக எழுத்துப் பூர்வமாக விளக்கம் அளித்தனர்.
தங்கள் பெயர்களை மா மதி, மா மயூ என மாற்றி கொண்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கு குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது. தங்கள் மகள்களை எப்படியாவது மீட்டே ஆக வேண்டும் என்பதில் காமராஜ்–சத்திய ஜோதி தம்பதியர் உறுதியாக உள்ளனர். அவர்களுக்கு துணையாக அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தினர் போராடி வருகின்றனர்.

விளக்கம்
இந்த விவகாரம் தொடர்பாக ஜக்கி வாசுதேவ் இன்னும் வாய் திறக்கவில்லை. பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக இப்படி இளம் வயதினரை ஆசிரமத்தில் சேர்ப்பது எப்படி சரியாகும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு யோகா ஆசிரமங்கள் சர்ச்சையில் சிக்கி வருகின்றன. அந்த வரிசையில் ஈஷா யோகா மையத்தின் மீதும் புகார் எழுந்துள்ளது. அந்த ஆசிரமத்தில் துறவிகளுக்கு வழங்கப்படும் உணவில் குறிப்பிட்ட மயக்க பொருள் கலந்து இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக ஜக்கி வாசுதேவ் விளக்கம் அளிக்க வேண்டும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.