எடப்பாடி பழனிசாமி இதுவரை எட்டிய படிகள் !

671

தமிழக முதலமைச்சராக பதவியேற்க்க இருப்பதாக கூறப்படும் எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் வரலாறு குறித்த சிறப்பு செய்தித்தொகுப்பை தற்போது காண்போம்.
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சொத்து குவிப்பு வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் மூவரும் குற்றவாளிகள் என்றும் அவர்களுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா விதித்த 4 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தும் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. இதையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சசிகலா கூவத்தூர் ரிசார்ட்டில் எம்.எல்.ஏ-களுடன் ஆலோசனை நடத்தினார். இதில், அதிமுக-வின் சட்டமன்ற குழுவின் புதிய தலைவராக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சராக தேர்வுசெய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இன்றைய பரபரப்பான அரசியல் சூழலில் எடப்பாடி பழனிச்சாமி புதிய ட்ரெண்டாகியுள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையத்தில் விவசாயக் குடும்பத்தில் கருப்ப கவுண்டர், தவுசாயம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க வில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியல் பிரவேசம் எடுத்த இவர் 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியிலிருந்து அ.தி.மு.க. ஜெ பிரிவில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து 1991 ஆம் ஆண்டு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்றத்துக்குள் நுழைந்த அவர், 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து கடந்த 2011 ஆண்டு மீண்டும் எடப்பாடி தொகுதியிலிருந்து சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக அவர் பதவி வகித்தார். கடந்த ஆண்டும் நடைபெற்ற தேர்தலில் 4-வது முறையாக அதே தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் பொதுப்பணித்துறை அமைச்சராக தற்போது பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.