ஈரோடு – சேலம் இடையே ஓடும் ரயில்களில் தொடர் கொள்ளை | துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு

408

ஈரோடு – சேலம் இடையே ரயில்களில் தொடர்கொள்ளை எதிரொலியாக ரயில்பாதையில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு – சேலம் இடையே மகுடஞ்சாவடி பகுதியில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ரயில்கள் மணிக்கு இருபது கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இதைப் பயன்படுத்தி, ஈரோடு, சேலம் நிலையங்களில் ரயிலில் ஏறும் கொள்ளையர்கள் பயணிகளை மிரட்டித் தங்கச் சங்கிலி, செல்பேசி, பணம் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு ரயில் மெதுவாகச் செல்லும்போது இறங்கித் தப்பியோடி விடுகின்றனர். இதைத் தடுக்க சங்ககிரி அருகே வைகுந்தத்தில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்றுக் காவலர்களைத் தாக்கிவிட்டுக் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.

இதையடுத்து மாவலிப்பாளையம் முதல் மகுடஞ்சாவடி வரை ரயில்பாதையோரம் நூறு மீட்டர் தொலைவுக்கு இருவர் என்கிற வீதத்தில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். ஈரோடு – சேலம் இடையே இயங்கும் அனைத்து ரயில்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புக்காகச் செல்கின்றனர். இந்நிலையில் ரயில்வே காவல்துறைத் தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு, காவல்துறைத் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தீபா கர்னிகர் ஆகியோர் ரயில்பாதையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.