ஈஸ்டர் திருநாளையொட்டி தலைவர்கள் வாழ்த்து…

169

ஈஸ்டர் திருநாளையொட்டி கிறிஸ்துவ மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை கிறிஸ்துவ மக்கள் ஈஸ்டர் திருநாளாக கொண்டாடி வருகின்றனர். உலகமெங்கும் நாளை ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்த புனித நாளில் உலகமெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டும் என்றும், சகோதரத்துவம் தழைக்கட்டும் என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களிடையே சமய நல்லிணக்கமும், வாழ்வில் மறுமலர்ச்சியும் ஏற்படக் கூடிய வகையில், இந்த ஈஸ்டர் திருநாள் அமைந்திட வேண்டும் என்றும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஈஸ்டர் திருநாளில், அன்பும், இரக்கமும் அனைவரிடமும் நிரந்தரமாக தங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மத, இன, மொழி வேறுபாடுகளை மறந்து, பகைவர்களுக்கும் அருளும் பண்பு மனிதர்களிடையே மிளிரவும், அனைவரும் அமைதி, சமாதானத்தோடு மகிழ்ச்சியாக வாழ இயேசு கிறிஸ்துவின் போதனைகளை நெஞ்சில் உறுதி ஏற்போம் என குறிப்பிட்டுள்ளார்.