போலி நம்பர் பிளேட் காரில் பயணம்: சென்னையை சேர்ந்த சாதிக் உள்பட 9 பேர் திருவனந்தபுரத்தில் கைது! அதிகாரிகள் துருவித்துருவி வசாரணை!!

335

திருவனந்தபுரம், ஆக.6–
போலி நம்பர் பிளேட் காரில் பயணித்த சென்னையை சேர்ந்த சாதிக் உள்பட 9 பேர் கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் துருவித்துருவி விசாரித்து வருகின்றனர்.
கேரளாவில் தீவிரவாதிகளின் ஊடுருவலும் நடமாட்டமும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வேறுபல சட்டவிரோத நடவடிக்கைகளும் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. இப்பின்னணியில் திருவனந்தபுரத்திலும் மற்ற முக்கிய நகரங்களிலும் உளவுப்பிரிவு அதிகாரிகளின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் சிவப்பு சுடர் விளக்கு பொருத்தப்பட்ட காரில் பயணம் செய்த கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த எல்ஜின்சாம், முருகன், புதுச்சேரியை சேர்ந்த ராஜசேகரன், ரவிதாஸ், ஜாபர்அலி ஆகிய 5 பேரை திருவனந்தபுரம் கரமனை பகுதியில் கேரள போலீசார் கைது செய்தனர்.
இந்த ஐவரில் ஒருவர் அகில இந்திய பயங்கரவாத தடுப்பு முன்னணியின் தலைவர் எம்.எஸ்.பிட்டாவின் பாதுகாவலர் என்று தன்னை கூறிக் கொண்டதாக தெரிகிறது. கைது செய்யப்பட்டவர்களிடம் மத்திய ரா பிரிவினர் மற்றும் கேரள போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தினர்.
இவர்களுக்கு தீவிரவாதிகளோடு தொடர்பு உண்டு என்பதற்கான ஆதாரம் எதுவும் கிடைத்ததாக தெரியவில்லை. திருவனந்தபுரம் அருகே உள்ள கோவளத்திற்கு உல்லாசப் பயணம் சென்ற போது போலீசார் இடைமறித்து கைது செய்து விட்டனர் என்று இவர்கள் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து தடை ஏதும் ஏற்படக்கூடாது என்பதற்காகத் தான் காரில் சிவப்புச் சுடர் விளக்கை பொருத்தியிருந்ததாக இவர்கள் கூறினர்.
இதற்கிடையே திருவனந்தபுரத்தில் போலி நம்பர் பிளேட் காரில் பயணித்த சென்னையை சேர்ந்த சாதிக் பாட்ஷா உள்ளிட்ட 4 பேரை கேரள போலீசார் கைது செய்தனர். சாதிக் பாட்ஷாவுடன் கைதான, ஷாஜகான், ராஜா, ராஜிதா ஆகியோர் நண்பர்கள் மற்றும் உதவியாளர்கள் என்று கூறப்படுகிறது. கேஎல்02பியு9197 என நம்பர் பிளேட்டில் எண் குறிப்பிடப்பட்டிருந்தது. கேரளாவில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் பியு தொடர் எண்ணில் இந்த நம்பர் கொடுக்கப்பட வில்லை. என்பதால் இதை பார்த்த ஓர் ஆட்டோ டிரைவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதன்பேரில் தான் திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் பகுதியில் இந்த காரில் பயணம் செய்தவர்களை போலீசார் மடக்கினர். இந்த காரின் உண்மையான நம்பர் டிஎன்10ஏஇ0700 ஆகும். போக்குவரத்து பிரச்சினை ஏற்படக் கூடாது. வெளிமாநில கார் என்பதால் சிக்கல் ஏற்படக் கூடாது என்பதால் நம்பர் பிளேட்டை மாற்றியதாக இவர்கள் தெரிவித்தனர். இவர்களிடம் மத்திய ரா பிரிவு அதிகாரிகள், கேரள போலீசார், தமிழ்நாடு க்யூ பிரிவு போலீசார் துருவித்துருவி விசாரித்து வருகின்றனர்.
சாதிக் பாட்ஷா சென்னை விருகம்பாக்கத்தில் மேன்பவர் ஏஜென்சி நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜா கார் டிரைவர். ஷாஜகானும், ராஜிதாவும் சாதிக்கின் நண்பர் மற்றும் உதவியாளர் என்று கூறப்படுகிறது.