குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர் மனித வெடிகுண்டுக்கு சமமானவர்! நீதிமன்றம் கருத்து!!

195

புதுடெல்லி, ஜூலை.25–
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர், மனித வெடிகுண்டுக்கு ஒப்பானவர்’ என்று டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக இந்தர்ஜித் (35) என்பவர் மீது சில மாதங்களுக்கு முன் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில், இந்தர்ஜித்துக்கு 5 நாள் சிறைத் தண்டனையுடன் ரூ.4,000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், அவரது ஓட்டுநர் உரிமமும் 6 மாதங்களுக்கு முடக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்தர்ஜித் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை, நீதிபதி லோகேஷ் குமார் முன் நடைபெற்றது. அப்போது, இந்தர்ஜித்தின் சிறை தண்டனையை ரத்து செய்ய நீதிபதி மறுத்துவிட்டார்.
“குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர், மனித வெடிகுண்டுக்கு ஒப்பானவர். தனது உயிருக்கு மட்டுமின்றி, சாலையில் செல்வோரின் உயிருக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறார்’ என்று நீதிபதி தெரிவித்தார். எனினும், இந்தர்ஜித் முதல் முறை குற்றவாளி என்பதாலும், அவரது குடும்பமே அவரது சம்பாத்தியத்தை நம்பியிருப்பதை கவனத்தில் கொண்டும் 5 நாள் சிறைத் தண்டனையை, 2 நாளாக நீதிபதி குறைத்தார்.